சுகாதாரமின்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

சுகாதாரமின்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்;

Update: 2021-09-18 16:48 GMT
வேலூர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் கடந்த 10-ந் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி லோஷினி (வயது 10) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாள். 

மேலும் அதே ஒட்டலில் சாப்பிட்ட 40 பேர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒட்டல்களிலும் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், கந்தவேல் ஆகியோர் இன்று வேலூர் பாகாயம், சாய்நாதபுரம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் என்று மொத்தம் 16 கடைகளில் ஆய்வு செய்தனர். 

அப்போது ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் கெட்டுப்போன மீன், இறைச்சி, காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தப்படுகிறதா என்றும், வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் சோதனை செய்தனர்.

 இதில், கெட்டுப்போன 20 கிலோ மாட்டு இறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிகளவு நிறமூட்டி (கலர்) பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சுகாதாரமின்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்