நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை முயற்சி
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை இளைஞர்கள் காப்பாற்றினர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த வரதராஜன் மனைவி இந்திராணி (வயது 65). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். அதில் ஒரு மகளுடன் இந்திராணி வசித்து வருகிறார். இந்தநிலையில் அவரது மகள், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் உறவினரின் விசேஷத்திற்கு நேற்று புறப்பட்டார். அப்போது இந்திராணி, தன்னையும் உடன் அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு அவரது மகள், அழைத்து செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த இந்திராணி, நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி வைகை ஆற்றுக்கு வந்தார்.
பின்னர் அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த இளைஞர்கள் சிலர், ஆற்றில் குதித்து மூதாட்டியை காப்பாற்றினர். அவரை ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள், விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார், மூதாட்டி இந்திராணியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.