திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி; பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்&நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குள்ளனம்பட்டி
திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்&நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயானம் ஆக்கிரமிப்பு
திண்டுக்கல்லை அடுத்த குள்ளனம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக திண்டுக்கல்&நத்தம் சாலையில் நல்லாம்பட்டி பிரிவு அருகே மயானம் உள்ளது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மயானத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு மயான பகுதியில் வளர்ந்திருந்த மரம், செடிகளை அகற்றியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த குள்ளனம்பட்டி பொதுமக்கள் நேற்று காலை நல்லாம்பட்டி பிரிவில், திண்டுக்கல்&நத்தம் சாலையில் திரண்டனர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் திண்டுக்கல்&நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக காலையில் பணிக்கு செல்வதற்காக பஸ்சில் பயணம் செய்தவர்களும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களும் அவதியடைந்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், தாலுகா சப்&இன்ஸ்பெக்டர் விஜய், திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள், நாளை (திங்கட்கிழமை) கிழக்கு தாசில்தார் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் பொதுமக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் திண்டுக்கல்&நத்தம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.