பிளஸ்2 மாணவிக்கு கொரோனா
நாட்டறம்பள்ளியில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்2 மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சக மாணவிகள் 38 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்&2 மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சக மாணவிகள் 38 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மாணவிக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்கல்நத்தம் குருமர் வட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவி நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்&2 படித்து வருகிறார்.
இவரும், இவரது 24 வயது சகோதரர் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 16-ந் தேதி நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
கொரோனா பரிசோதனை முடிவில் மாணவி மற்றும் அவரது சகோதரர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதுகுறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை சார்பில் அப்பகுதிக்கு சென்று கிருமிநாசினி தெளித்து பாதிக்கப்பட்டது. மேலும் மாணவி உள்பட 2 பேரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த பெற்றோர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கிருமிநாசினி தெளிப்பு
இதைத்தொடர்ந்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை டாக்டர் செல்லமுத்து மற்றும் சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி, சுகாதார பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு சென்று மாணவி படித்த வகுப்பறையில் உள்ள சக மாணவிகள் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்பிறகு பேரூராட்சி சார்பில் வகுப்பறையிலும் மற்றும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பள்ளி மாணவிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.