மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நாட்டறம்பள்ளி அருகே பழுதான மின்சார டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீரமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே பழுதான மின்சார டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீரமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த தகரகுப்பம் அருகே கவுண்டர் வட்டத்தில் 70&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 15 பேர் தங்களுடைய விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பம்புசெட் அமைத்து விவசாயம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மேலும் அப்பகுதிக்கு மிகவும் குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதால் பம்புசெட் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி மின்சார அலுவலகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இன்று அப்பகுதி பொதுமக்கள் கவுண்டர் வட்டத்தில் உள்ள பழுதாகி உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே நின்று கொண்டு உடனடியாக பழுதான டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மின்வாரிய அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.