பணிகள் நிறைவடைந்ததால் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததால் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனால் விரைவில் இந்த பாதையில் மின்சார ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.256 கோடியில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் 2016-ம் ஆண்டு தொடங்கியது. செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில்-கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி-தாம்பரம் என 3 கட்டங்களாக நடைபெற்ற பணிகள் தற்போது முற்றிலும் நிறைவடைந்தது.
இதையடுத்து தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 3-வது ரெயில் பாதையில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயில் என்ஜினுக்கு மாலை அணிவித்து, புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் கற்பூரம் ஏற்றி, தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைத்து என்ஜினின் சக்கரத்தில் எலுமிச்சை பழங்களை வைத்து சிறப்பு பூஜை செய்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புதிய ரெயில் பாதையில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர்.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு முதலில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பின்னர் 100 கிலோமீட்டர் வேகத்திலும் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
3-வது ரெயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளதால் விரைவில் இந்த புதிய ரெயில் பாதையில் மின்சார ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வாறு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்போது சென்னை கடற்கரை- செங்கல்பட்டுக்கு அடிக்கடி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் இது சென்னை புறநகர் பகுதி ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.