வெடிகுண்டு வீசி கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பூந்தமல்லி,
மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவருக்கும், பரவக்கோட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. 2005-ம் ஆண்டு உள்ளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பொய்யாமொழி, ஆசைத்தம்பியை அழைத்து கொண்டு தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்று இருதரப்பினரையும் சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் பொய்யாமொழியை தமிழ்ச்செல்வன் ஆபாசமாக திட்டி அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த பொய்யாமொழி, தமிழ்ச்செல்வன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.
இதுதொடர்பாக பரமக்கோட்டை போலீசார் பொய்யாமொழி, ஆசைத்தம்பி மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பொய்யாமொழி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் ஏற்கனவே 2019-ம் ஆண்டு 3 பேரை குற்றவாளி இல்லை என தள்ளுபடி செய்தும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் இறந்து போனார். மேலும் 2 பேர் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.