பிரியாணி-புரோட்டா கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
குமரி மாவட்டத்தில் பிரியாணி மற்றும் புரோட்டா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் செயற்கை வண்ணம் ஊட்டப்பட்ட 63 கிலோ கோழிக்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிரியாணி மற்றும் புரோட்டா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் செயற்கை வண்ணம் ஊட்டப்பட்ட 63 கிலோ கோழிக்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
அதிகாரிகள் சோதனை
ஆரணியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சாப்பிட்ட ஒரு சிறுமி பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பிரியாணி கடைகள், ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரியாணி கடைகள், ஓட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல் குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கோழிக்கறி அழிப்பு
இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள பிரியாணி கடைகள், புரோட்டா கடைகள், ஆடு, கோழி இறைச்சிக் கடைகள் போன்றவற்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியிலும் அந்தந்த ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி செந்தில்குமார் தலைமையில், மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோர் சோதனை செய்தனர். அப்போது நாகர்கோவில் வடசேரி, ஒழுகினசேரி, பறக்கை ரோடு, கேப் ரோடு உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. இதில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் செயற்கை வண்ணம் பூசப்பட்டிருந்த 50 கிலோ கோழிக்கறியும் (கிரில் சிக்கன் தயாரிக்க வைத்திருந்தது), 1½ கிலோ மட்டன் கறி ஆகியவையும், கேப்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் 2 கிலோ கோழிக்கறியும் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டல் உரிமையாளர் முன்னிலையில் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
அபராதம்
மேலும் அந்த ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது. மேலும் கோழிக்கறிகள் மீது தடவப்பட்டிருந்த செயற்கை வண்ணப் பொடியில் அனுமதிக்கப்பட்ட பொடிதான் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல் மாவட்டம் முழுவதும் 34 பகுதிகளில் சோதனை நடந்தது. இதில் செயற்கை வண்ணப் பொடி பூசப்பட்ட 11 கிலோ கோழிக்கறியும், அரை கிலோ மட்டனும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
----