அசாம் வாலிபர் கொலை வழக்கில் 3 தொழிலாளிகள் கைது - ரூ.20 கடனை திரும்ப கொடுக்காததால் தீர்த்து கட்டினர்

பெங்களூருவில் நடந்த அசாம் வாலிபர் கொலையில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.20 கடனை திரும்ப கொடுக்காததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2021-09-17 21:11 GMT
பெங்களூரு:
  
வாலிபர் கொலை

  அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 35). இவர், பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் தங்கி இருந்து பேப்பர் பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி பொம்மனஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடை அருகே தலையில் பலத்த காயங்களுடன் சஞ்சய் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

  சஞ்சயை, அவரது நண்பர்களே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் சஞ்சயின் தலையை கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சஞ்சயின் நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

ரூ.20 கடனுக்காக...

  இந்த நிலையில், சஞ்சய் கொலையில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர்கள் 3 பேரை பொம்மனஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த், மேற்கு வங்காளத்தை சேர்ந்த் தீபக், தமிழ்நாட்டை சேர்ந்த மகதேஷ் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் தொழிலாளிகள் ஆவார்கள். பழைய பேப்பர், பிற பொருட்களை விற்று வந்திருந்தனர். தீபக்கிடம் சஞ்சய் ரூ.20 கடன் வாங்கி இருந்தார்.

  கடந்த மாதம் 13-ந் தேதி பொம்மனஹள்ளியில் உள்ள மதுக்கடையில் 4 பேரும் மதுஅருந்தி உள்ளனர். குடிபோதையில் ரூ.20 கடனை திரும்ப கொடுக்கும்படி சஞ்சயிடம் தீபக் கேட்டுள்ளார். அவர் பணத்தை கொடுக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் தீபக் உள்பட 3 பேரும் சேர்ந்து சஞ்சயை அடித்து, உதைத்து தாக்கியும், அங்கு கிடந்த கல்லால் தாக்கியும் கொலை செய்தது தெரியவந்தது. கைதான 3 போ் மீதும் பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்