தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை
உடுமலை அருகே வனப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;
தளி
உடுமலை அருகே வனப்பகுதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவில்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆனால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வெள்ளிக்கிழமை இரவே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவார்கள்.
பின்னர் கோவிந்தா கோஷத்துடன் விடிய விடிய மலையேறிச் சென்று தேங்காய் பழம் கலந்த அவுளை ஏழுமலையானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரையிலும் வனப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
சாமி தரிசனத்துக்கு தடை
அனைவரும் பாதுகாப்போடு வந்து செல்வதற்கு ஏதுவாக வனத்துறையினர், போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று ஆவலோடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோயில் நிர்வாகம் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதேபோன்று திருமூர்த்தி அணைக்கு அருகே உள்ள கரட்டு பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.