பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
கரூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 2020-21ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. பிளஸ்-2 மதிப்பெண், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதால் அந்த பொதுத்தேர்வுக்கு மட்டும் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இருந்து 50 சதவீதமும், பிளஸ்-1 பொதுத்தேர்வில் இருந்து 20 சதவீதமும், பிளஸ்-2 செய்முறை தேர்வில் 30 சதவீதமும் என மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.
மதிப்பெண் சான்றிதழ்
இந்தநிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்து தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று சென்றனர்.