தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-09-17 19:26 GMT
கரூர்

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தல் 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், பொதுமக்கள் சரியாக வேலை கிடைக்காமல் வருமானம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மருவத்தூர் கிராம மக்களின் வறுமையை போக்க 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

ப.ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.

 எரியாத மின் விளக்குகள் 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 19-வது வார்டு ஜெயில் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் செல்ல வசதியாக சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக   இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்களில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால் முதியர்கள் சாலையில் செல்லும்போது தடுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினேஷ், காந்திமார்க்கெட், திருச்சி. 

 குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமணி  கிராமத்தில் இருந்து  பெட்டவாய்த்தலை செல்லும் சாலை  அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து சாலையில் ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் வாகனத்தை விட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரசாந்த், பொய்யாமணி, கரூர். 

 குட்டையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா வெண்மான்கொண்டான் கிராமம் காளியம்மன்கோவில் கூத்தாடி குட்டையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அதில் கொசுக்கள் அதிக அளவில்  உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பிரபாகரன், வெண்மான்கொண்டான், அரியலூர்.

 சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம்  நெய்க்குப்பை முதல் அகலங்கநல்லூர் வரை சாலை அமைக்கும் பணி கடந்த  8 மாதங்களாக மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால்  லால்குடி-நெய்க்குப்பை இடையே பஸ் போக்குவரத்து கடந்த  8 மாதங்களாக  தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே  சாலை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பிரசாத், நெய்க்குப்பை, திருச்சி.

 நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலத்திற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பணிமனையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் திருச்சியில்  அதிகாலை 4.50 மணி அளவில் இருந்து புறப்பட்டு காலை 7.10 மணி அளவில் கொத்தமங்கலத்தை வந்தடையும். இந்த பஸ்சால் கொத்தமங்கலம், ஆலங்குடி, புதுக்கோட்டை, திருச்சி மக்கள் பயன்அடைந்து வந்தனர். இந்த நிலையில் இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சு.நேதாஜி, கொத்தமங்கலம், புதுக்கோட்டை.

 மூடப்பட்ட மருத்துவமனையால் நோயளிகள் அவதி  

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சபெருமாள்பட்டி  கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி நோயாளிகள் பெரிதும் பயன்அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர் பணி ஓய்வு பெற்று வீட்டிற்கு சென்ற பிறகு இந்த மருத்துவமனை மூடப்பட்டது. அன்று முதல் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சுந்தர்ராஜ், பச்சபெருமாள்பட்டி, திருச்சி. 

 இணைப்பு சாலையை  பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா

பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கும், ரோஸ் கார்டனுக்கும் இணைப்பு தார் சாலை அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன் ஜல்லி கற்கள் போட்ட பிறகு  சிலரது  தனிப்பட்ட  லாபத்திற்காக சாலையில் தடுப்பு சுவர் அமைத்தும், குழிகள் பறித்தும் சாலையை  பயன்படுத்தாதவாறு தடுத்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரமுள்ள பஸ் நிலையத்திற்கு 4 கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகின்றனர். இதனால் வயதான பெரியோர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள்  கடுமையான சிரமத்தில் உள்ளனர்.  எனவே நகராட்சி  நிர்வாகம் உடனடி  நடவடிக்கை  எடுத்து இணைப்பு சாலையை  பயன்படுத்த  உதவ வேண்டும்.

சுரேஷ், ரோஸ் கார்டன், பெரம்பலூர்.

 தினத்தந்தி புகார் பெட்டிக்கு பொதுமக்கள் நன்றி 

பெரம்பலூர் மாவட்டம் மேலூர் கிராமம் அங்கன்வாடி பள்ளி அருகில் இருக்கும் முருங்கை மரத்தின் மேலே சென்ற மின்கம்பிகளால் குழந்தைகளுக்கு ஆபத்தான நிலை உள்ளதாக நேற்று முன்தினம் தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மின் கம்பங்களுக்கு மேலே சென்ற  மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து  அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

பொதுமக்கள், மேலூர், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்