வாக்குகள் எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு
வாக்குகள் எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு
சோளிங்கர்
சோளிங்கர் ஒன்றியத்தில் அடுத்த மாதம் 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. சோளிங்கர் ஒன்றியத்தில் 97,658 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 48,426 பேர் ஆண் வாக்காளர்கள், 49,228 பேர் பெண் வாக்காளர்கள். 4 பேர் மூன்றாம் பாலினத்தினர். 196 வாக்குப்பதிரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 19 ஒன்றிய கவுன்சிலர்கள், 40 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 318 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
சோளிங்கர் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். சித்தூர் சாலையில் உள்ள குட்லெட் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு வசதிகள், மின்சார வசதி, அடிப்படை வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நகருக்குள் உள்ளதால் வாக்கு எண்ணிக்கை நாளின் போது போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் வெற்றிகுமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, அன்பரசு, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.