‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2021-09-17 17:28 GMT
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருவில் செல்பவர்களை நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், சிவகாசி. 
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் 
மதுரை மாவட்டம் திருமருகலை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி நாட்டார்மங்கலம் சாலையில் உள்ள மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது. அப்பகுதியில் உள்ள குடிசைகளை ஒட்டி மின்கம்பிகள் செல்வதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 தினேஷ் ராவ், நாட்டார்மங்கலம். 

குண்டும், குழியுமான சாலை 
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது இருமேனி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
சேகர், இருமேனி. 

வேகத்தடை தேவை 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாப்பட்டு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் செல்வதே விபத்துக்கு காரணமாகிறது. எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். 
ஆறுமுகம் சேதுராமன், தென்மாப்பட்டு. .

கால்வாய் தூர்வாரப்படுமா? 
மதுரை அழகர்கோவில் தெப்பம் பொய்கைகரைபட்டி கிராமத்தில் உள்ளது. இந்த குளத்தில் பல‌‌ ஆண்டு காலமாக தண்ணீர் இல்லை. அதற்கு காரணம் வரத்து கால்வாய் தூர்வாராமல் இருப்பது தான். எனவே அழகர் கோவிலில் இருந்து வரத்து கால்வாய் சீரமைத்து தெப்பம் நடுவே உள்ள மண்டபத்தை ‌சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வன்னியபெருமாள், பொய்கைகரைபட்டி. 

தொல்லை கொடுக்கும் நாய்கள் 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் அச்சத்துடன் கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
கணேசன், பிள்ளையார்பட்டி. 

வீணாகும் குடிநீர் 
ராமநாதபுரம் நகராட்சி 5-வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். 
பொதுமக்கள், ராமநாதபுரம். 

கால்நடைகளால் விபத்து 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலைகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி பேரூராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சேவியர், திருப்பத்தூர். 

அடிப்படை வசதி தேவை
மதுரை மாவட்டம் இரும்பாடி பஞ்சாயத்து பாலகிருஷ்ணாபுரம் லட்சுமி நகரில் சுமார் 50 வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு முறையான சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை. சாலையில் தெருவிளக்கு இல்லாத காரணத்தினால் இரவில் பெண்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இங்குள்ள கிராம மக்களுக்கு அரசு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
-ராஜ், பாலகிருஷ்ணாபுரம். 
=========== 

மேலும் செய்திகள்