நெய்வேலி அருகே மொபட் மீது கார் மோதி 2 பேர் பலி
நெய்வேலி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
கம்மாபுரம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவர் அரசக்குழியில் உள்ள கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் துர்காலட்சுமி(30), இவருடைய 1 வயது மகன் சசிதரன், உறவினர் விநாயகமூர்த்தி மகன் இசைமாறன் ஆகியோருடன் ஒரு மொபட்டில் அரசக்குழியில் இருந்து ஊத்தங்கால் நோக்கி வந்து கொண்டிருந்தார். நெய்வேலி அடுத்த கொம்பாடிக்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை பன்னீர் செல்வம் முந்தி செல்ல முயன்றார்.
2 பேர் பலி
அப்போது கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த கார் ஒன்று பன்னீர்செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இசைமாறன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம், துர்காலட்சுமி, சசிதரன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். சசிதரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துர்காலட்சுமி மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.