குஜிலியம்பாறை அருகே மணல் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி

குஜிலியம்பாறை அருகே எம்சாண்ட் மணல் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.

Update: 2021-09-17 16:16 GMT
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே போடிபட்டியில் தனியாருக்கு சொந்தமான எம்&சாண்ட் மணல் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த பிட்டம்பர்சிங் (வயது 20) என்ற தொழிலாளி வேலை பார்த்து வந்தார். இந்த ஆலையில் எம்-சாண்ட் மணல் உற்பத்தியின்போது எந்திரத்தில் ‘கன்வேயர் பெல்ட்‘ இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு பிட்டம்பர்சிங் மணல் தயாரிக்கும் எந்திரத்தின் அருகில் நின்று வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 
அப்போது எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் எதிர்பாராதவிதமாக அவர் சிக்கினார். இதில் பெல்டில் இழுத்து செல்லப்பட்ட அவர் எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிட்டம்பர்சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்