கலெக்டர் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு
கலெக்டர் தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு
கோவை
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கலெக்டர் சமீரன் தலைமையில் ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
பிறந்த நாள் விழா
பெரியார் பிறந்தநாளை, சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பெரியாரின் 143-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசின் அறிவிப்பை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். அதை திரும்பக்கூறி அரசுத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட னர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம் உள்பட அரசு துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
மாநகராட்சி
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் முன்பு ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஊழியர்கள் சமூக நீதிநாள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இதற்கு துணை ஆணையாளர் விமல்ராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் மாநகராட்சி பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஆர்.ஜெகதீஷ் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்பு துறை வீரர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.