ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ரெட்டியார்சத்திரத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.;
திண்டுக்கல்:
ரெட்டியார்சத்திரத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் சின்னு என்ற முருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு செயலாளர் காமாட்சிபுரம் ஊராட்சி தலைவர் கணேஷ் பிரபு வரவேற்றார். இதில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஜே.ஜே.எம். திட்டத்தை ஊராட்சி நிர்வாகமே செயல்படுத்த வேண்டும். 14, 15-ம் நிதிக்குழு மற்றும் திட்டங்களில் உள்ள வேலைகளுக்கும், குடிநீர் இணைப்புக்கும் ஊராட்சி தலைவர் ஒப்புதல் பெறவேண்டும். எம்ஜிஎன்ஆர்சிஎஸ் திட்ட பணிகளில் தலைவர் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிடக்கூடாது.
கனிம திட்டத்தில் பெறப்படும் தொகையை பொதுநிதி கணக்கு அனுப்பி வைக்கவேண்டும். தெருவிளக்குகளை புதுப்பிக்கவும், பராமரிக்கவும் ஊராட்சியின் பொதுநிதியில் இருந்து செலவு செய்ய உத்தரவிடவேண்டும். ஒன்றிய அளவில் மாதாந்திர கூட்டம் நடத்தவேண்டும். மாவட்ட கலெக்டர் மூலம் 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்வாக பணிகளுக்காகவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண கலந்தாலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களை இடமாற்றுவதற்கு தலைவர் அனுமதி இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் செய்யக்கூடாது. ஊராட்சியில் காலியாக உள்ள ஓஎச்டி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகிய காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவு வழங்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்த வேண்டும். ஊராட்சி தலைவருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கொத்தப்புளி ஊராட்சி தலைவர் சுந்தரி அன்பரசு நன்றி கூறினார்.