தொழிலாளர் வீடுகளை உடைத்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
தேவாலா, பந்தலூர் பகுதியில் தொழிலாளர் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து மீண்டும் அட்டகாசம் செய்தது.
கூடலூர்
தேவாலா, பந்தலூர் பகுதியில் தொழிலாளர் வீடுகளை காட்டு யானைகள் உடைத்து மீண்டும் அட்டகாசம் செய்தது.
வனத்துறையினர் கண்காணிப்பு
கூடலூர் தாலுகா தேவாலா, நாடுகாணி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகள், வணிக நிறுவனங்களை தினமும் சேதப்படுத்தின.
இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் அழைத்து வந்து, காட்டு யானைகளை கேரள வனப் பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
வீடுகளை உடைத்து அட்டகாசம்
இந்த நிலையில் தேவாலா அட்டிப்பகுதியில் 13 காட்டு யானைகள் நுழைந்தது. பின்னர் அந்த யானைகள் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
தொடர்ந்து சேலக்கட்டை பகுதியைச் சேர்ந்த அஞ்சலை தேவி, ராமையா ஆகிய தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் அதிகாலையில் அங்கிருந்து சென்றது.
பொதுமக்கள் பீதி
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீட வழங்க வேண்டும், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தேவாலா பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் மீண்டும் தொடர்ந்து உள்ளதால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
பந்தலூர் தாலுகா
அதுபோன்று பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை அருகே ராக்வுட் 5 காட்டுயானைகள் புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. பின்னர் அந்தப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி யது.
பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் அங்கு சாகுபடி செய்து இருந்த இஞ்சி உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.
அதுபோன்று கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் செல்வராஜ் என்பவரின் வீட்டின் மேற்கூரையும் சேதப்படுத்தியது. அதுபோன்று பாட்டவயல் செல்லும் சாலையில் போலீஸ் குடியிருப்பு அருகே சாலையில் நின்ற காட்டு யானையை வனத்துறையினர் துரத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.