பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடங்கியது.

Update: 2021-09-17 13:10 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் நேற்று தொடங்கியது.

மதிப்பெண் சான்றிதழ்

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 9 ஆயிரத்து 53 மாணவர்கள், 10 ஆயிரத்து 999 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 52 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத பதிவு செய்து இருந்தனர். இவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண் மற்றும் பிளஸ்-2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-2 மதிப்பெண் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த மதிப்பெண் விவரங்களை தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த ஜூலை 19-ம் தேதி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பிளஸ்-2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த ஜூலை 22-ம் தேதி இணையதளத்தில் வெளிடப்பட்டது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து நீட், பொறியியல் போன்ற மேல்படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர். மேலும், பல கல்லூரிகளில் இந்த தற்காலிக மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையும் நடந்து முடிந்து உள்ளது.
இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தது.

வினியோகம் 

அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவியருக்கு வழங்கினர். 

வேலைவாய்ப்பு பதிவு

மேலும், மாணவர்களது பிளஸ்-2 கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணிகளும் அந்தந்த பள்ளிகளில் நடந்தது. ஏற்கனவே எஸ்எஸ்எல்சி கல்வி தகுதியை பதிவு செய்த மாணவ, மாணவியர் அந்த ஆவணங்களை பயன்படுத்தி பிளஸ் 2 கல்வித் தகுதியை பதிவு செய்தனர். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ரூத் ரத்தினகுமாரி தலைமையில் ஆசிரியர்கள் 405 மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினர்.
இதேபோல நாடார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் 364 பேருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் தலைமையில் நடந்தது. இதில் 171 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றனர்.

மேலும் செய்திகள்