வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டார்.

Update: 2021-09-17 00:38 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான  வேட்புமனு படிவம், கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில், தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்போது கலெக்டர் பேசுகையில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும்போது சமூக இடைவெளியை பின்பற்றியும், கையுறை, முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகளை சரியாக பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என கூறினார்.
அப்போது திருப்பத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்