கலப்பட டீசல் தயாரித்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே கலப்பட டீசல் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வண்டலூர் பைபாஸ் சாலையில் சித்துக்காடு கிராமம் அருகே ரசாயனம் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்றது. டிரைவர் மற்றும் மேலும் 2 பேர் டீசலுடன் ரசாயனத்தை கலந்து கலப்பட டீசல் தயாரித்து கொண்டிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் ஆபாஷ்குமார்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், டி.எஸ்.பி.ஜான் சுந்தர் தலைமையில், இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது உரிமையாளருக்கு தெரியாமல் ரசாயனத்துடன் டீசலை கலந்து போலி டீசல் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய லாரி டிரைவரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, தண்டு பஜார் பகுதியை சேர்ந்த அயூப்கான் (50) மற்றும் அவரது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டம் உசரத் குடியிருப்பு, நடுத்தெரு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (42), தூத்துக்குடி மாவட்டம், நொச்சிக்குளம் கோவில் தெருவை சேர்ந்த அலெக்ஸ் (49) ஆகியோரை கைது செய்து டேங்கர் லாரி உள்பட ரூ. 41 லட்சத்து 10 ஆயிரத்து 438 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.