திருவள்ளூர் அருகே அரிசி கடையில் திருடியவர் கைது

திருவள்ளூர் அருகே அரிசி கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-17 00:16 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூரில் அரிசி கடை நடத்தி வருபவர் சுப்புகண்ணன். இவர் திருச்சி செல்வதற்காக தனது கடையை மணவாள நகரை சேர்ந்த தனது மைத்துனர் பிரவீன்குமார் (20) என்பவரது பொறுப்பில் விட்டு விட்டு சென்றார். இதை தொடர்ந்து பிரவின்குமார் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வசூல் செய்து வைத்திருந்த ரூ.40 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, பான்கார்டு போன்றவற்றை ஒரு பச்சை நிற பையில் வைத்து கல்லாவில் வைத்திருந்தார். நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் அந்த பச்சை நிற பையை காணவில்லை. இதனால் பதறிப்போன பிரவீன்குமார் கடை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் கடையின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்து பார்த்தார். அப்போதுதான் கடைக்கு வழக்கமாக வந்து செல்லும் மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மேகநாதன் (40) என்பவர் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பிரவீன்குமார் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்