ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம்- போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தகுமார் நடவடிக்கை
ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் நடவடிக்கை எடுத்தார்.
ஹெல்மெட் சோதனை
ஈரோடு மாவட்டத்தில் 2 சக்கர வாகனங்கள் ஓட்டும் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கேட்டுக்கொண்டு உள்ளார். ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணிவதை அதிகப்படுத்தும் வகையில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் வாகன தணிக்கை மற்றும் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டார்.
அபராதம்-அறிவுரை
அப்போது அந்த வழியாக 2 சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, தலா ரூ.100 அபராதம் விதித்தனர். பின்னர் 2 சக்கர வாகன ஓட்டிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் அறிவுரைகள் வழங்கினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
வாகனங்களில் செல்லும் ஒவ்வொருவரும் தங்களை நம்பி குடும்பத்தினர் வீடுகளில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த அவசர வேலையாக இருந்தாலும், நாம் நமது குடும்பத்தினருக்கு தேவை என்று உணர்ந்தால், ஹெல்மெட் அணிந்து 2 சக்கர வாகனங்கள் ஓட்ட வேண்டும். உயிரும், உடல் உறுப்புகளும் நமக்கு தேவை. எனவே அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது’ என்றார்.