வீட்டில் போதைப்பொருள் தயாரித்த நைஜீரியா வாலிபர் கைது
பெங்களூருவில் வீட்டிலேயே போதைப்பொருட்கள் தயாரித்து விற்ற நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
நைஜீரியா வாலிபர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி 1-வது ஸ்டேஜ், பெட்டதாசபுரா அருகே சாமுண்டி லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் தயாரித்து விற்கப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது தலைமையிலான போலீசார், சாமுண்டி லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் போதைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வசித்து வந்த நைஜீரியா நாட்டு வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவரது பெயர் டேவிட் ஜான் என்று தெரிந்தது.
போதைப்பொருட்கள் தயாரிப்பு
இவர், படிப்பு தொடர்பான விசாவில் இந்தியாவுக்கு வந்திருந்தார். பின்னர் பெங்களூருவுக்கு வந்த டேவிட் ஜான், நைஜீரியா, பிற வெளிநாட்டு வாலிபர்களுடன் சேர்ந்து போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்பிறகு, நைஜீரியாவை சேர்ந்த சிலருடன் சேர்ந்து, அவரே போதைப்பொருட்களை தயாரிக்க தொடங்கி உள்ளார். இதற்காக எலெக்ட்ரானிக் சிட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். அந்த வீட்டையே போதைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போல அவர் மாற்றி இருந்தார்.
ரசாயனம், பிற பொருட்களை பயன்படுத்தியும், நவீன கருவிகள் மூலமாகவும் எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை தனது வீட்டில் வைத்தே டேவிட் ஜான் தயாரித்து வந்துள்ளார். இவ்வாறு தயாரிக்கும் பொருட்களை பெங்களூருவில் இருக்கும் நைஜீரியா வாலிபர்கள் மூலமாக கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு விற்பனை செய்து டேவிட் ஜான் பணம் சம்பாதித்துள்ளார்.
ரூ.2 கோடி மதிப்பு
இதுதவிர வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் பெங்களூருவில் தயாரிக்கும் போதைப்பொருட்களை அனுப்பி வைத்து வந்துள்ளார். அதாவது தபால் பார்சல்கள் மற்றும் கூரியர் மூலமாக பெங்களூருவில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுககும் டேவிட் ஜான் போதைப்பொருட்களை அனுப்பி வைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான டேவிட் ஜான் வீட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள், அந்த போதைப்பொருட்களை தயாரிக்க பயன்படுத்திய ரசாயனம் உள்ளிட்ட பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான டேவிட் ஜான் மீது எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் சில நைஜீரியா வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கமல்பந்த் பார்வையிட்டார்
கைதான டேவிட் ஜானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருந்த போதைப்பொருட்கள், பிற பொருட்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் பார்வையிட்டார்கள்.
மேலும் போதைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த வாலிபரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ள போலீஸ் கமிஷனர் கமல்பந்த், அந்த போலீசாருக்கு ரூ.75 ஆயிரம் ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
டேவிட் ஜான் சிக்கியது எப்படி?
போதைப்பொருட்கள் தயாரித்து விற்ற டேவிட் ஜான் சிக்கியது எப்படி? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுகையில், "பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே போதைப்பொருட்கள் விற்பனையில் நைஜீரியாவை சேர்ந்த பலரை போலீசார் கைது செய்திருந்தனர்.
அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடத்திய போது, எலெக்ட்ரானிக் சிட்டியில் வாடகை வீட்டில் டேவிட் ஜான் போதைப்பொருட்கள் தயாரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, சோதனை நடத்தி ரூ.2 கோடி போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் போதைப்பொருட்கள் தயாரித்த சம்பவம் தற்போது தான் நடந்திருக்கிறது, " என்றார்.
போலி பாஸ்போர்ட்டு தயாரித்த வாலிபர்
பெங்களூருவில் போதைப்பொருட்கள் தயாரித்து விற்றதாக கைதான டேவிட் ஜான், போலி பாஸ்போர்ட்டு தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எலெக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கும் மீரா என்பவரது வீட்டில் ரூ.10 ஆயிரம் வாடகைக்கு அவர் தங்கி இருந்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாக மீராவிடம் அவர் கூறி இருந்தார்.
காலையில் சென்றால் வீட்டுக்கு இரவில் தான் வருவதால் டேவிட் ஜான் பற்றியும், அவர் போதைப்பொருட்கள் தயாரிப்பது பற்றியும் மீராவுக்கு எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. தற்போது தனது வீட்டில் போதைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பது அறிந்ததும் மீரா அதிர்ச்சி அடைந்துள்ளார்.