195 பேரிடம் சுமார் ரூ.7 கோடி மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 195 பேரிடம் சுமார் ரூ.7 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகரின் மகன் மீது நடவடிக்கைக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 195 பேரிடம் சுமார் ரூ.7 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகரின் மகன் மீது நடவடிக்கைக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாய பிரிவு தலைவர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் டிக்கா சேதுராமன். இவர் அ.தி.மு.க. மாவட்ட விவசாய பிரிவு தலைவராக உள்ளார். இவருடைய மகன் ராஜாசிவப்பிரகாஷ் (வயது49). இவர் கூட்டுறவு குடிசை தொழில் சங்கத்தின் உசிலம்பட்டி கிளையின் தலைவராக இருந்து வந்தார்..
இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 195 பேரிடம் புரோக்கர்கள் மூலம் சுமார் ரூ. 6 கோடியே 89 லட்சத்து 15 ஆயிரம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.. ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கித்தரவில்லை. அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்றும் தெரியவருகிறது.
சாலைமறியல்
இந்தநிலையில் ராஜாசிவப்பிரகாஷ் தன்னிடம் எந்த சொத்தும் இல்லை என்றும் இந்த 195 பேரிடம் கடன் வாங்கி தொழில் நடத்தி வந்ததாகவும், அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் தன்னிடம் எந்த பணமும் இல்லை. எனவே இந்த 195 பேரிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று உசிலம்பட்டி ேகார்ட்டில் நடந்தது. அப்போது இந்த 195 பேரும் ஆஜராகி இருந்தனர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி பிரேம் ஆனந்த் அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தாக கூறப்படுகிறது.
எனவே பணத்தை இழந்தவர்கள், உசிலம்பட்டியில் மதுரை-தேனி சாலையில் உள்ள காதி கிராப்ட் சங்க அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மதுரை- தேனி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.