கர்நாடகத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்காக 13 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
30 லட்சம் பேருக்கு தடுப்பூசி
கர்நாடகத்தில் கொரோனா 2-வது கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு 600-க்கு கீழ் பதிவாகி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அது ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மாநில அரசின் சுகாதாரத்துறைக்கு லேசான ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு-தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி திருமண மண்டவங்கள், கூட்ட அரங்குகள் என பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அரிசி நிறுத்தப்படும்
இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு கிராமங்களில் தண்டோரா மூலம் மெகா தடுப்பூசி முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அரசின் திட்ட பயன்கள் கிடைக்கும் என்றும், இல்லாவிட்டால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றும் தண்டோரா மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் குறித்து சுகாதாரத்துளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் இதுவரை 4.80 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் தகுதியானவர்களில் 73 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது. 27 சதவீதம் பேருக்கு 2 டோசும் போடப்பட்டு இருக்கிறது. இந்த நியைில் இன்று (வெள்ளிக்கிழமைஸ்) மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் 34 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
13 ஆயிரம் முகாம்கள்
முன்னுரிமை பிரிவை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ கல்லூரி, நர்சிங் கல்லூரி மாணவர்களையும் இந்தபணியில் பயன்படுத்தப்படுகிறார்கள். 12 ஆயிரத்து 700 அரசு முகாம்களும், 300 தனியார் முகாம்களும் என மொத்தம் 13 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.