வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம், 10½ பவுன் நகை திருட்டு

அஞ்சுகிராமத்தில் பட்டப்பகலில் காய்கறி வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம், 10½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2021-09-16 20:59 GMT
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமத்தில் பட்டப்பகலில் காய்கறி வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம், 10½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
வியாபாரி
அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தாமஸ் பொன்ராஜ் (வயது 55), காய்கறி வியாபாரி. இவர் வழக்கம் போல் காலையில் வியாபாரத்துக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
வீட்டில் இருந்த அவருடைய மனைவி அன்னதங்கம், உறவினருடன் உவரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார்.
நகை-பணம் திருட்டு
இந்தநிலையில் பிற்பகல் 3 மணி அளவில் தாமஸ் பொன்ராஜ் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். 
அப்போது படுக்கை அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி தாமஸ் பொன்ராஜ் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்