அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டருக்கு கத்திக்குத்து
அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டருக்கு கத்திக்குத்து
காரியாபட்டி
திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45). இவர் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும், பந்தல்குடியைச் சேர்ந்த டிரைவர் குணசேகரன் ஆகியோர் அருப்புக்கோட்டையிலிருந்து பூமாலைபட்டி செல்லும் அரசு பஸ்சில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் இருந்து பூமாலைபட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த பஸ் ஆனைக்குளத்தில் இருந்து தாமோதரபட்டிக்கு இடையில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பஸ்சை முந்திச் சென்று பஸ்சை வழிமறித்தனர்.
இதையடுத்து பஸ் நின்றதும் கத்தியால் கண்டக்டர் ரவிக்குமாரை, டிரைவர் குணசேகரனையும் குத்திவிட்டு ஓடிவிட்டனர். காயம்பட்ட கண்டக்டர் ரவிக்குமார் மற்றும் டிரைவர் குணசேகரன் ஆகியோர் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர், கண்டக்டரை கத்தியால் குத்திய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.