மூதாட்டியை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

மூதாட்டியை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2021-09-16 20:44 GMT
திருச்சி 
திருச்சி திருவெறும்பூர் வாரியார்நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி முத்துலெட்சுமி (வயது 55). இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவர் ரேவதி (49). இவர்கள் அருகருகே வசித்து வந்ததால் முத்துலெட்சுமிக்கும், ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி முத்துலெட்சுமியை தனது வீட்டுக்கு தோசை மாவு கொண்டு வருமாறு ரேவதி கூறினார். இதையடுத்து முத்துலெட்சுமியும் மாவு எடுத்து கொண்டு மாலை 5.30 மணி அளவில் ரேவதி வீட்டுக்கு சென்றார்.
அங்கு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, திடீரென முத்துலெட்சுமியை இரும்பு கம்பியால் அடித்து ரேவதி படுகொலை செய்தார். பின்னர் அவரது கழுத்தில் அணிந்து இருந்த 11 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு முத்துலெட்சுமியின் உடலை போர்வையால் சுற்றி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார். மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் அவரது உடலை வீட்டிற்கு வெளியே இழுத்து சென்று சாக்கடை அருகே வீசினார்.
ஆயுள் தண்டனை
முத்துலெட்சுமியை காணாததால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினர். அப்போது அங்குள்ள சாக்கடை அருகே போர்வையால் சுற்றப்பட்டு உடல் கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக இதுகுறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில், முத்துலெட்சுமியை ரேவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் தான் கொலை செய்தனர் என தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ரேவதியையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ரேவதிக்கு ஆயுள் தண்டனை விதித்து இருந்தார். இதற்கிடையே ரேவதியின் மகன் மீதான வழக்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்