பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை நீட்டிக்க வேண்டும் - பா.ஜனதா, காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
பெங்களூருவில் கொரோனாவல் குறைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பா.ஜனதா, காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெங்களூரு:
இரவு 8 மணிக்கே...
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனபுரா வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காரணமாக பெங்களூருவில் இரவு 9 மணிக்கு பின்பு இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மெட்ரோ ரெயில் சேவை காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவையின் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மெட்ரோ ரெயில் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி நேரத்தை நீட்டிக்காமல் மெட்ரோ ரெயில் நிர்வாகம் இருந்து வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
எம்.பி.க்கள் வலியுறுத்தல்
இந்த நிலையில், பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பெங்களூரு எம்.பி.க்களும் வலியுறுத்தி உள்ளனர். அதன்படி, முன்னாள் மத்திய மந்திரியும், வடக்கு தொகுதி எம்.பி.யுமான சதானந்தகவுடா கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி மெட்ரோ ரெயில் சேவையின் நேரத்தை குறைத்திருப்பது சரியல்ல. மற்ற போக்குவரத்து நள்ளிரவு வரை தொடர்ந்து நடக்கிறது. அதனால் மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நீட்டிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும் என்றார்.
இதுபோல், எம்.பி.களான டி.கே.சுரேஷ், பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் மெட்ரோ ரெயில் நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தி உள்ளனர்.