தசரா விழாவில் பங்கேற்க வந்துள்ள 8 யானைகளுக்கு மைசூரு அரண்மனையில் உற்சாக வரவேற்பு
உலக புகழ்பெற்ற தசரா விழாவையெர்டி 8 யானைகள் மைசூரு அரண்மனைக்கு வந்தன. அந்த யானைகளுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மைசூரு:
மைசூரு தசரா விழா
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவையொட்டி 10 நாட்கள் தசரா விழா நடக்கும். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண லட்சக்கணக்கான மக்கள் மைசூருவில் திரள்வார்கள். அதாவது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கொண்டு கம்பீரமாக நடைபோட, மற்ற யானைகள் மற்றும் அலங்கார அணிவகுப்பு வண்டிகள் அதனை பின்தொடர்ந்து செல்லும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையா கொண்டாடப்பட்டதுடன், ஜம்பு சவாரி ஊர்வலமும் அரண்மனை வளாகத்திலேயே நடத்தப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் கொரேனா பரவல் காரணமாக தசரா விழாவை எளிமையாக நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. 15-ந்தேதி ஜம்புசவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் நடக்க உள்ளது.
யானைகள் கஜபயணம்
இந்த தசரா விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு தசரா விழாவில் பங்கேற்க பல்வேறு முகாம்களில் இருந்து 8 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதாவது தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு (வயது 56), விக்ரமா (58), தனஞ்செயா (43), காவேரி (44), சைத்ரா (40), லட்சுமி (20), கோபாலசுவாமி (38), அஸ்வதம்மா (34) ஆகிய யானைகள் ஆகும். இதில் அஸ்வதம்மா யானை புதிதாக தசரா விழாவில் பங்கேற்கிறது. இந்த யானைகளின் கஜபயணம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அதாவது அந்த யானைகள் கடந்த 13-ந்தேதி வீரனஒசஹள்ளியில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன.
மைசூரு அசோக்புரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இந்த யானைகள் தங்க வைக்கப்பட்டிருந்தன. தசரா யானைகளை வருகிற 16-ந்தேதி (நேற்று) மைசூரு அரண்மனைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
அதன்படி நேற்று காலை 8.36 மணி முதல் காலை 9.11 மணிக்குள் சுப லக்னத்தில் அசோக்புரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து தசரா யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன. அங்கிருந்து அரண்மனைக்கு யானைகள் நடைபயணமாக அழைத்து வரப்பட்டன. அரண்மனை கோட்டை முன்பு இருக்கும் ஜெயமார்த்தாண்டா நுழைவுவாயில் வழியாக அந்த யானைகள் அரண்மனை வளாகத்துக்குள் அழைத்து வரப்பட்டது.
அப்போது சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அர்ச்சர்கள், யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்ய, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் பாரம்பரிய முறைப்படி மலர் தூவி யானைகளை வரவேற்றார். பின்னர் யானைகள் அரண்மனை வளாகத்தில் உள்ள ஷெட்டுகளில் தங்க வைக்கப்பட்டன. அங்கு யானைகளுக்கு தேவையான தீனிகள் வழங்கப்பட்டன.
கலந்துகொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுனந்தா பாலநேத்ரா, எம்.எல்.ஏ.க்கள் நாகேந்திரா, ராமதாஸ், மூடா தலைவர் ராஜீவ், கலெக்டர் பகாதி கவுதம், அரண்மனை மண்டல இயக்குனர் சுப்பிரமணியன், போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு சேத்தன், வனத்துறை அதிகாரி கரிகாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.