கார் டிரைவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கார் டிரைவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

Update: 2021-09-16 20:22 GMT
பெரம்பலூர்:

கார் கண்ணாடி உடைப்பு
பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). கார் டிரைவர். இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கணேசனுடைய காரின் முகப்பு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி கொண்டிருந்தனர்.
இதனால் சத்தம் கேட்டு எழுந்து வந்த கணேசன் குடும்பத்தினர் அதனை தடுக்க முயன்றனர். அவர்களை மர்மநபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கணேசன் வீட்டை நோக்கி வீசிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். வீட்டின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வாசலில் விழுந்து வெடித்ததில், அந்த இடம் கருகியது. அப்போது கணேசன் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கணேசன் உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டும், அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தினர்.
தப்பி சென்றனர்
அப்போது ஏற்கனவே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்ற 2 மர்மநபர்கள், மேலும் 3 பேருடன் சேர்ந்து மீண்டும் கணேசன் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது போலீசார் இருப்பதை கண்ட அவர்கள் திரும்பி சென்றனர். அவர்களை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றதால், போலீசாரால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறுகையில், பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்மநபர்களில் ஒருவர் பெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டை சேர்ந்த செல்வா என்கிற நீலகண்டன் என்பதும், மற்றொருவர் பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த சத்யமூர்த்தி என்பதும் தெரியவந்தது. நீலகண்டன் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன, என்று போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் வலைவீச்சு
இது தொடர்பாக கணேசன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், நீலகண்டன் மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு என் வீட்டிற்கு வந்து தங்களை ரவுடிகள் என்று கூறி பணம் கேட்டு மிரட்டினர். நான் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் நீலகண்டன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு சென்றார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நீலகண்டன், சத்யமூர்த்தி மற்றும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமாக இருக்குமோ? என்று சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் டிரைவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்