ஊராட்சி செயலாளர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்
ஊராட்சி செயலாளர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
செந்துறை:
விஷம் குடித்து சாவு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 45). இவருக்கு இந்திரலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பழனிவேல் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் திம்மூர் கிராம ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வந்தார். கணக்குகள் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கும், பழனிவேலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான பழனிவேல் தனது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
போராட்டம்
இதையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து இடையக்குறிச்சி கிராமத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது மனைவி இந்திரலட்சுமி மற்றும் உறவினர்கள், ஊராட்சி செயலாளர் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு, பழனிவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி உடலை ஆம்புலன்சில் இருந்து கீழே இறக்க மறுத்து ஆம்புலன்சை முற்றுகையிட்டு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குவாகம் போலீசார் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.