இன்றைய கூட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல்-டீசல் விலை தொடர்பாக இன்றைய கூட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
மதுரை,
ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல்-டீசல் விலை தொடர்பாக இன்றைய கூட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
வாகன காப்பகம்
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முதலில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே ரூ.44 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஆய்வு செய்தார். இந்த வாகன காப்பகத்தில் 110 நான்கு சக்கர வாகனங்கள், 1,401 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம், விற்பனை அங்காடி மையம் உள்ளிட்டவை கட்டும் பணி நடந்து வருகிறது. அதன்பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெரியார் பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
பெரியார் பஸ் நிலையத்தில் ரூ.174 கோடியே 56 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருகிறது. அங்கு 57 டவுன் பஸ்கள் வந்து செல்வதற்கும், தரைதளத்திற்கு கீழ் இரண்டு தளங்களும் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளில் 462 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் தரைத்தளத்திற்கு கீழ் முதல் தளத்தில் 371 நான்கு சக்கர வாகனங்களும், தரைத்தளத்திற்கு கீழ் 2-வது தளத்தில் சுமார் 4 ஆயிரத்து 865 இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். அதனைத்தொடர்ந்து அமைச்சர் வைகை ஆற்றுக்கரையில் ரூ.84.12 கோடி செலவில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
3 பேர் நலன்
முன்னதாக பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கூறினேன். தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து உள்ளதால், மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. அந்த கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டு கருங்கற்கள் பதித்து அதன் மேல் வெள்ளை பெயிண்ட் அடித்து இருக்கிறார்கள்.
அதே போல் பல்லடுக்கு வாகன காப்பகத்திற்கு வாகனங்கள் வருவதற்கும், வெளியேறுவதற்கு உரிய சாலை வசதிகள் இல்லை. அதனை கவனத்தில் கொள்ளாமலேயே பணிகளை செய்திருக்கிறார்கள். பெரியார் பஸ் நிலையம் பல கோடி ரூபாய் செலவு செய்து சீரமைக்கப்பட்டு இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையில் தான் பஸ்கள் நிறுத்த முடியும் என்று சொல்கிறார்கள்.
மதுரையில் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்பது அனைத்து துறை அமைச்சர் மற்றும் மதுரையில் முன்பு இருந்த 2 அமைச்சர்கள் ஆகிய 3 பேரின் நலனுக்காக மட்டுமே போடப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த நலனும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் மக்கள் பலன் அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் பதில்
அதன்பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம், “நாளை (இன்று) நடக்கும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?” என்று தினத்தந்தி நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், “நான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்” என்றார்.
மேலும் இந்த கூட்டத்தில் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி நடக்க இருப்பதாகவும், அதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்றும் கேட்கப்பட்டது.
அதற்கு அமைச்சர், “ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல் விலையை கொண்டு வருவது தொடர்பாக எந்த அஜண்டாவும் தற்போதைய கூட்டத்தில் இல்லை, அது தொடர்பாக எனக்கு குறிப்பு எதுவும் வரவில்லை” என்று கூறினார்.