கே.சி.வீரமணி வீடு உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2021-09-16 19:12 GMT
ஜோலார்பேட்டை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
28 இடங்களில் சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. மேலும் அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது, லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்தார்.
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடுகள், கல்லூரி மற்றும் வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, நாட்டறம்பள்ளி, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார்சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 6.30 மணியளவில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்தாஸ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள வீரமணியின் வீட்டில் சோதனை செய்தனர்.

ஆதரவாளர்களின் வீடுகள்

அப்போது வீரமணி வீட்டில் இல்லாததால் நாட்டறம்பள்ளி சாலையில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்த வீரமணியை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஓட்டல் ஹில்ஸ், ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஓட்டல் ஹில்ஸ் ஆகிய இடங்களில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 6.50 மணியளவில் சோதனையை தொடங்கினர். 

நாட்டறம்பள்ளி சாலையில் அமைந்துள்ள மற்றொரு வீடு, வீரமணியின் சகோதரர்கள் கே.சி.காமராஜ், கே.சி.அழகிரி ஆகியோரின் வீடுகள், வீரமணியின் குடும்பத்துக்கு சொந்தமான பீடி மண்டி, தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஆர்.ரமேஷ், திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் ஆகியோரின் வீடுகள், ஜோலார்பேட்டை- நாட்டறம்பள்ளி சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம், நாட்டறம்பள்ளி மல்லகுண்டா பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா, நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சாம்ராஜ், நாட்டறம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ், ஜோலார்பேட்டை நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வீடுகள் உள்பட 13 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

போளூர்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மாமனார் பழனி, சின்ன மாமனார் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகள் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த குருவிமலை கிராமத்தில்  உள்ளது. இங்கும் நேற்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கார்த்திகேயன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருக்கிறார். பழனியின் மகள் மேகலை கே.சி.வீரமணியின் மனைவி ஆவார்.

வேலூர்

வீரமணியின் ஆதரவாளரான அ.தி.மு.க. வேலூர் ஒன்றிய செயலாளர், வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகரை சேர்ந்த கர்னல் வீட்டிலும், சேண்பாக்கத்தில் உள்ள மாநகர மாவட்ட துணை செயலாளர் ஜெயபிரகாஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். 

காலை 6.30 மணி அளவில் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கு தேவையான கால்குலேட்டர் உள்ளிட்ட கருவிகளையும் உடன் கொண்டு சென்றனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்வது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அ.தி.மு.க.வி.னர் வீரமணியின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத்குமார், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவி, வேலூர் மாவட்ட செயலாளர்கள் வேலழகன், அப்பு, திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி.குமார், இளைஞர் பாசறை செயலாளர் கே.எஸ்.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர். இதனால் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் ஆகியோர் விரைந்து சென்றனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


ரூ. 28 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரது வீடு, கல்லூரி மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு என 28 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
கே.சி.வீரமணிக்கு தமிழகத்தில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758-க்கு அதாவது 654 சதவீதம் சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்