விவசாயிகளை தாக்க முயன்ற சிறுத்தைகள்
களக்காடு அருகே விவசாயிகளை சிறுத்தைகள் தாக்க முயன்றதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.;
களக்காடு:
களக்காடு அருகே விவசாயிகளை சிறுத்தைகள் தாக்க முயன்றதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
விவசாயிகள்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் ஜெயராஜ், பாலன். இவர்கள் நேற்று முன்தினம் இரவில் கீழவடகரை பூலாங்குளம் பத்துக்காட்டில் விளைநிலங்களுக்குள் காட்டு பன்றி, கடமான்கள் புகுந்து விடாமல் தடுக்க காவல் பணிக்கு வழக்கம்போல் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென 2 சிறுத்தைகள் அங்கு வந்தன. அந்த சிறுத்தைகள் ஜெயராஜ், பாலன் மீது பாய்ந்து, தாக்க முயன்றது. இதைப்பார்த்த 2 பேரும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இதனால் சிறுத்தைகள் அங்கிருந்து ஓடின.
வனத்துறையினர் ரோந்து
இதுபற்றி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பதிந்திருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். அவை சிறுத்தையின் கால் தடங்கள் தான் என்பதை உறுதி செய்தனர்.
சிறுத்தைகள் ஊர் பகுதியை நோக்கி ஓடியதால் கீழவடகரை பொதுமக்கள் தெருக்களில் குவிந்தனர். ஆங்காங்கே தீ வைத்து தடுப்புகள் ஏற்படுத்தினர். வனத்துறையினரும், கிராம இளைஞர்களும் இரவு முழுவதும் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இரவில் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். இதனால் கீழவடகரையில் விடிய, விடிய பதற்றம் நிலவியது. கிராம மக்களும் பீதி அடைந்துள்ளனர். ஊருக்குள் புகுந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.