தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்

பரமக்குடியில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறி தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை பெண் தடுத்து நிறுத்தினார். உடனே மணமகனுக்கு சிறுமியை மணம் முடிக்க முயன்றனர். அதை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.;

Update: 2021-09-16 18:19 GMT
ராமநாதபுரம்,

பரமக்குடியில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறி தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை பெண் தடுத்து நிறுத்தினார். உடனே மணமகனுக்கு சிறுமியை மணம் முடிக்க முயன்றனர். அதை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

திருமணத்தை நிறுத்திய பெண்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி பரமக்குடியில் ஒரு மண்டபத்தில் நேற்று மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்துக்கு தயாராகி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தாலிக்கட்டும் நேரத்தில் திடீரென்று மணப்பெண், ஹலோ போலீசுக்கு தொடர்பு கொண்டு, தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், தனக்கு மற்றொருவருடன் திருமணம் நடத்த உள்ளனர். எனவே மாப்பிள்ளை பிடிக்காததால் தனக்கு திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லை. திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து உள்ளார்.
தகவல் அறிந்ததும் உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணப்பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தி உள்ளனர். இதனால் மணமகன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமியை திருமணம் செய்ய முயற்சி

உடனே திருமண நிச்சயித்த நேரத்தில் மணமகனுக்கு திருமணம் நடத்தி விட மணமகன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவுக்கார சிறுமி 17 வயதான ஒருவரை மணப்பெண்ணாக தயார் செய்து திருமணத்துக்கு ஆயத்தப்படுத்தினர்.
இது பற்றி சைல்டு லைன், சமூகநலத்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவர்கள் விரைந்து வந்து சிறுமியை வாலிபருக்கு திருமணம் செய்து வைக்ககூடாது என்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பரபரப்பு

அடுத்தடுத்த திருப்பங்களால் திருமணம் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருமணத்தை நிறுத்திய 23 வயதான மணப்பெண்ணை போலீசார் அழைத்து சென்று ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
சிறுமியை பாதுகாப்பாக அழைத்து சென்று ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என்று பெற்றோரை அழைத்து விளக்கி கூறி எழுதி வாங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்