அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் காயம்
வேடசந்தூர் அருகே அரசு பஸ்-லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50 பேர் பயணம் செய்தனர். பஸ்சை கரூர் மணல்மேட்டை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 49) என்பவர் ஓட்டினார். வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டி எல்லைக்காளியம்மன் கோவில் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது, குஜராத்தில் இருந்து மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலைக்கு நூல் பேரல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, கிருஷ்ணகிரியை சேர்ந்த மணி (32) என்பவர் ஓட்டினார்.
இந்தநிலையில் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த அரசு பஸ், லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த விருதலைப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் (43), சின்னதாராபுரத்தை சேர்ந்த பாதுஷா (34), கோலார்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (52), வேடசந்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (28), கோபால்பட்டியை சேர்ந்த நாகராஜ் (55) உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களுக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.