தெரு விளக்கு எரிகிறது
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் தெரு விளக்கு பழுதடைந்து எரியாமல், பொதுமக்கள் அவதிப்படுவதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின்விளக்கு அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
சீரமைக்கப்படுமா?
வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட காருபாறை சாஸ்தா கோவில் தெரு சாலை சேதமடைந்து பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக தார் சாலை என்பதற்கான அடையாளமே இல்லாமல் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்கப்படுமா?.
-தருண், காருபாறை.
நோய் பரவும் அபாயம்
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாபுஜி தெருவில் ஒரு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது, சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், செடி, கொடிகள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது அஸீம், மணவாளக்குறிச்சி.
எரியாத தெருவிளக்குகள்
கட்டிமாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட செருப்பங்கோட்டில் இருந்து கல்லுவிளை எம்.ஜி.ஆர். காலனி செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபகலா முருகன், செருப்பங்கோடு.
வாகன ஓட்டிகள் அவதி
அழகியமண்டபத்தை அடுத்த மேக்காமண்டபம் சந்திப்பு பகுதியில் உள்ள சாலை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழை நேரத்தில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபின், மேக்காமண்டபம்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு எதிரே விக்டோரியா சாலைக்கு செல்லும் திருப்பத்தில் கழிவுநீர் ஓடை மூடப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக வாகனத்தில் செல்வோர், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலைவாணி, மாப்ஸ் தெரு.