வாணாபுரம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி 10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிறுத்தம் அருகில் ரூ.15 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. அன்று முதல் தற்போது வரை சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. சரியாக பராமரிக்காததால் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. தற்போது சமுதாயக்கூடம் பெட்டிக்கடையாக மாறியதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், சமுதாயக்கூடத்தில் குடிநீர், கழிவறை வசதி செய்து கொடுக்காததால் அங்கு சுபவிசேஷங்கள் நடத்துவதற்கு தகுதியில்லாத நிலை இருந்து வந்தது. சமுதாயக்கூடம் எப்போதும் பூட்டியே கிடந்தது. அந்தப் பகுதியில் சிலர் இரவில் மது குடித்து விட்டு பாட்டில்களை கீழே போட்டு உடைத்து சேதப்படுத்தி வந்தனர். தற்போது சமுதாயக்கூடத்தில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்து அரசு கட்டிய கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.