செஞ்சி பகுதியில் மழை: சாலையில் மண் அரிப்பு; போக்குவரத்து துண்டிப்பு

வாகன ஓட்டிகள் அவதி;

Update: 2021-09-16 17:36 GMT
செஞ்சி, 
செஞ்சி முதல் திருவண்ணாமலை வரை சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் குறுக்கே உள்ள சிறிய வாய்க்கால் பாலங்கள் அகற்றப்பட்டு, பெரிய பாலங்களாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. அப்போது செஞ்சியை அடுத்த செம்மேட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பாலம் அருகே அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையின் கீழ்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. 
இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் மற்றும் பாலம் கட்டும் நிறுவன ஊழியர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதற்கிடையே ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம்  மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தை சமன் செய்து, போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்