பூக்கள் அறுவடையை தள்ளிப்போடும் விவசாயிகள்
ஆயுத பூஜையையொட்டி விலை உயர வாய்ப்பு உள்ளதால் பூக்கள் அறுவடையை விவசாயிகள் தள்ளிப்போடுகின்றனர்.
நெகமம்,
நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளாளபாளையம், குள்ளக்காபாளையம் ஆகிய பகுதிகளில் செவ்வந்தி, கோழிக்கொண்டை, அரளி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர் செடிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆயுத பூஜை நாளில் செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர்களுக்கு மார்க்கெட்டுகளில் கடும் கிராக்கி ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு நெகமம் பகுதியில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பறித்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர் செடிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை, பருவம் தவறிய மழை உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட மலர் செடிகள் சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்து உள்ளது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு மலர்கள் வரத்து குறைந்து இருக்கிறது.
வருகிற ஆயுத பூஜையையொட்டி செவ்வந்தி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர்களுக்கான கிராக்கி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர்கள் செடிகளில் பூத்துக்குலுங்குகின்றன. ஆனால் ஆயுத பூஜையையொட்டி விலை உயர வாய்ப்பு உள்ளதால், தற்போது பூக்களை பறித்து மார்க்கெட்டுகளுக்கு அனுப்புவதை விவசாயிகள் தள்ளிபோடுகின்றனர்.
இதுகுறித்து நெகமம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
நெகமம் பகுதியில் சாகுபடி செய்யப்படும் மலர்கள், மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் ஆயுத பூஜை நெருங்கி வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தேவை அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் வாரத்தில் இருந்து மலர்கள் பறித்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தேவை அதிகளவில் உள்ளதால் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மலர்களை காலம் தாழ்த்தி பறிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது மார்க்கெட்டுகளுக்கு மலர்கள் வரத்து குறைந்து உள்ளது. மேலும் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல், சீரான விலையே நீடித்து வருகிறது. நவராத்திரி விழா தொடங்கியதும், அனைத்து மலர்களின் விலையும் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.