கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ.2½ லட்சத்துக்கு ஏலம்
பொன்மலை வேலாயுதசாமி கோவில் வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ.2½ லட்சத்துக்கு ஏலம் போனது.;
கிணத்துக்கடவு,
கோவை-பொள்ளாச்சி சாலையோரத்தில் கிணத்துக்கடவில் உள்ள பொன்மலையில் வேலாயுதசாமி கோவில் இருக்கிறது. இந்த மலையடிவாரத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இது கோவிலுக்கு சொந்தமானது ஆகும். இங்கு பக்தர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்த குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதை வசூலிக்கும் உரிமம், ஏலம் மூலம் வழங்கப்படுகிறது.
அதன்படி வருகிற 17-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு(2022) ஜூன் மாதம் 20-ந் தேதி வரை கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் நேற்று பொன்மலை வேலாயுதசாமி கோவில் செயல் அலுவலர் அறையில் நடைபெற்றது.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்(கிணத்துக்கடவு) குறிஞ்சிசெல்வி முன்னிலை வகித்தார். இதில் பொன்மலை வேலாயுதசாமி கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் உரிமத்தை ஏலம் கேட்பதற்காக பணம் கட்டிய 3 பேர் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வெளிப்படையான ஏலம் மற்றும் பெட்டியில் போடப்பட்டுள்ள டெண்டர் கடிதங்களில் அதிக தொகைக்கு கோரியவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் வெளிப்படையான ஏலம் தொடங்கியது.
பின்னர் ஆரம்ப தொகையாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கிணத்துக்கடவை சேர்ந்த தங்கராஜ் என்பவர் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டார். அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்கவில்லை.
இதனால் அவருக்கே உரிமம் கிடைத்தது.மேலும் பெட்டியில் கிடந்த டெண்டர் கடிதங்களை பிரித்து பார்த்தபோது, அதிலும் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் என தங்கராஜ் ஏலம் கேட்டு இருந்ததால், அவருக்கே உரிமம் வழங்க இறுதி செய்யப்பட்டது. இந்த தொகை கடந்த ஆண்டை விட ரூ.87 ஆயிரம் அதிகம் ஆகும்.