திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை,
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்-அனுராதா தினகரன் ஆகியோரின் மகள் ஜெயஹரணிக்கும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி வாண்டையார்-ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியையொட்டி திருமண மண்டபம் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சசிகலா, மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மங்கல வாத்தியங்கள் முழங்க இருவீட்டாரும் நிச்சயதார்த்த தாம்பூலம் பத்திரிகை மாற்றிக்கொண்டனர்.
தொடர்ந்து வேங்கிக்காலில் உள்ள பராசக்தி அம்மன் கோவில் அருகில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் குதிரை வண்டியில் மாப்பிள்ளை திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை அழைப்பின்போது வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை திருமண மண்டபத்தில் ஜெயஹரணிக்கும், ராமநாதன் துளசி ஐயா வாண்டையாருக்கும் சசிகலா முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதில் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா கலந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்து மாங்கல்யத்தை எடுத்து கொடுக்க, ராமநாதன் துளசி ஐயா வாண்டையார், ஜெயஹரணிக்கு தாலி கட்டினார். தொடர்ந்து மணமக்கள் மாலை மாற்றி கொண்டனர். பின்னர் சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக டி.டி.வி. தினகரன், அவரது மனைவி அனுராதா தினகரன் மற்றும் கிருஷ்ணசாமி வாண்டையார், அவரது மனைவி ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் டி.விவேகானந்தம் முனையரையர், வி.பாஸ்கரன்- சுபஸ்ரீ பாஸ்கரன், சத்தியவதி சுதாகர், ஸ்ரீதளாதேவி பாஸ்கரன், கே.எஸ்.சிவக்குமார்- பிரபா சிவக்குமார், எஸ்.வெங்கடேஷ்- ஹேமா வெங்கடேஷ், இளவரசி, விவேக் ஜெயராமன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் மணமக்களை தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தொழில் அதிபர் வைகுண்டராஜன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் டி.கணேசன். வேலூர் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி. செல்வம், ஓட்டல் அதிபர் ஆகாஷ் முத்துகிருஷ்ணன்.
அ.ம.மு.க. மாநில துணை பொது செயலாளர்கள் ரங்கசாமி, செந்தமிழன், மாநில பொருளாளர் மனோகரன், மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம், அமைப்பு செயலாளர் சி.கோபால், தேர்தல் பிரிவு செயலாளர் என்.ஜி.பார்த்திபன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் மா.கி.வரதராஜன் (வடக்கு), ஏ.பரந்தாமன் (தெற்கு), சி.விஜயகுமார் (மத்திய மாவட்டம்), வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் காட்பாடி ஏ.எஸ். ராஜா மற்றும் நிர்வாகிகள், தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மகாதேவமலை சித்தர் மணமக்களுக்கு மாலை அணிவித்து ஆசீர்வாதம் வழங்கினார்.