2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை, செப்.17-
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் மீண்டும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போடுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் 52 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 100 சதவீத இலக்கினை அடையவும், 100 சதவீத கொரோனா நோய் தொற்று இல்லா மாவட்டமாக திகழ வேண்டும் எனவும், தங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த பணியினை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்திட இயலும்.
மக்கள் அனைவரையும் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் உன்னத முயற்சியில் நீங்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) செல்வகுமார் மற்றும் பிரியாராஜ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.