வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி
வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி
கோவை
வங்கியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
தனியார் நிறுவன ஊழியர்
கோவை சொக்கம்புதூர் ரோடு பிருந்தா லே-அவுட்டை சேர்ந்தவர் சவுடப்பன் (வயது 38). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத் தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 15-ந் தேதி தனது நிறுவனத்தின் கணக்கில் செலுத்துவதற்காக ரூ.24,900 ரொக்கத்துடன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வந்தார்.
பின்னர் அவர், ஏ.டி.எம். மையத்தில் உள்ள பணம் செலுத்தும் எந்தி ரத்தில் தான் கொண்டு வந்த பணத்தை செலுத்தினார்.
அதில், ரூ.18 ஆயிரத்து 500-ஐ ஏ.டி.எம். எந்திரம் பெற்றுக்கொண்டது. மீதி 13 எண் ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளியது.
கள்ளநோட்டுகள்
ஆனாலும் சவுடப்பன், பணம் செலுத்தும் எந்திரத்தில் மீண்டும் மீண்டும் பணத்தை செலுத்தினார்.
ஆனால் அதையும் ஏற்காமல் எந்திரம் வெளியே தள்ளியது. இதனால் அவர், அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வங்கி காசாளரிடம் கொடுத்து, தங்களின் நிறுவன வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியதாக தெரிகிறது.
உடனே அவரிடம் இருந்து 13 எண்ணிக்கை 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிய வங்கி காசாளர் அதை கள்ளநோட்டா? நல்ல நோட்டா என கண்டுபிடிக்கும் கருவியில் போட்டு சோதனை செய்தார். இதில் சவுடப்பன் கொடுத்தது கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது.
பறிமுதல்
உடனே அவர் கொடுத்த தகவலின் பேரில் வங்கி மேலாளர் கிரிஜா, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சவுடப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து போலீசார் கூறும்போது, சவுடப்பன் தான் பணியாற்றும் நிறுவனத்தில் வழங்கிய பணத்தை தான் வங்கியில் செலுத்த வந்து உள்ளார். எனவே அவரிடமும், அவர் பணியாற்றும் நிறுவனத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 2 கள்ளநோட்டுகள் ஒரே சீரியலில் இருப்பதும் தெரியவந்தது. எனவே கள்ளநோட்டுகள் எங்கு இருந்து வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.