தீர்ப்புக்கு பயந்து விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
தீர்ப்புக்கு பயந்து விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு;
ஊட்டி
மனைவியை கொன்ற வழக்கில் தீர்ப்புக்கு பயந்து விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மனைவியை குத்தி கொலை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி அணியாடா கிராமத்தை சேர்ந்தவர் பென்னி (வயது 58), கூலி தொழிலாளி. இவரது மனைவி அந்தோணியம்மாள் (50). இவர்களது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. பென்னி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 28-4-2017-ம் ஆண்டு பென்னி தனது மனைவி அந்தோணியம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னியை கைது செய்தனர். அவர் ஜாமீனில் இருந்து வந்தார். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
தீர்ப்புக்கு பயந்து தப்பியோட்டம்
இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டு நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறுவதாக இருந்தது. இதற்கிடையில், கொலக்கம்பை போலீசார் கண்காணிப்பில் இருந்த பென்னி ஊட்டி கோர்ட்டில் இருந்து தப்பி சென்றார்.
தீர்ப்புக்கு பயந்து தப்பியோடி அவர் அன்று மாலை குன்னூர் சின்ன வண்டிசோலை பகுதியில் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிசிச்சை பெற்று வருகிறார். இதனால் நேற்று முன்தினம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் ரகளை
இந்த நிலையில் நேற்று கொலை வழக்கில் தீர்ப்பு கூறுவதாக இருந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் பென்னிக்கு செவிலியர்கள் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக கையில் ஊசியுடன் சிறிய குழாய்களை மாட்டினர்.
இதை பார்த்த அவர் ஊசியை பிடுங்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டு உள்ளார். உணவு வழங்கியும் சாப்பிட மறுத்து வருகிறார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது.
மேலும் சிறுநீர் கழிப்பதற்காக பொருத்தப்பட்ட குழாய்களை பிடுங்கியதால், உடலில் சிறிய பகுதி சிக்கி விட்டது. இதை எடுப்பதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதற்கிடையில், ஊட்டி கோர்ட்டு நீதிபதி குலசேகரன், மனைவியை கொலை செய்த வழக்கில் பென்னியை 24 மணி நேரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பென்னியின் உடல் மிகவும் மோசமானது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று மாலை பென்னி சிகிச்சை பலனின்றி திடீரென இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.