லஞ்ச வழக்கில் கைதான கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை-நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

பட்டாவில் சர்வே எண்ணை சேர்க்க ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-09-16 00:32 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள பாலப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). விவசாயி. இவர் கடந்த 2005-ம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில், சர்வே எண்ணை சேர்க்க அப்போதைய புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சதாசிவத்திடம் விண்ணப்பித்து இருந்தார்.

அதற்கு ரூ.500 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சர்வே எண்ணை கம்ப்யூட்டர் பட்டாவில் சேர்க்க முடியும் என, கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் தெரிவித்து உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி ராசாயன பவுடர் தடவிய ரூ.500-ஐ கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர் சதாசிவத்திடம், விவசாயி சரவணன் கொடுத்து உள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதாசிவத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சதாசிவத்துக்கு, 3 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சதாசிவம் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்