மேலாளரிடம் ரூ.4¾ லட்சம் வழிப்பறி: பெட்ரோல் பங்க் ஊழியர் உள்பட 4 பேர் கைது-மேலும் 6 பேருக்கு வலைவீச்சு
மேலாளரிடம் ரூ.4¾ லட்சத்தை வழிப்பறி செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.;
எலச்சிபாளையம்:
ரூ.4¾ லட்சம் வழிப்பறி
திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் அருகே கார்த்திக்கேயன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் மேலாளராக வேணுகோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 11-ந் தேதி வழக்கம் போல் பெட்ரோல் பங்கில் வசூலான ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்தை, தனது மொபட்டில் எடுத்து சென்றார். திருச்செங்கோட்டில் உள்ள வங்கியில் பணத்தை செலுத்த சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவரை 2 பேர் பின்தொடர்ந்தனர்.
அவர்கள் திடீரென வேணுகோபால் மொபட்டை வழிமறித்தனர். பின்னர் அவரை மிரட்டி, தாக்கி ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீசார் விசாரணை
இந்தநிலையில் நேற்று காலை போலீசார் பாலமடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ராமாபுரத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன், பிரபாகரன் (வயது 29), தினேஷ்பாபு (34) என்பதும், பெட்ரோல் பங்க் மேலாளர் வேணுகோபாலிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இந்த வழிப்பறிக்கு கார்த்திக்கேயனின் மற்றொரு பெட்ரோல் பங்கில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வரும் கொல்லப்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (25) என்பவர் மூளையாக செயல்பட்டதும், மேலும் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து போலீசார் ஜீவானந்தத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வழிப்பறிக்கு திட்டம் தீட்டி கொடுத்ததை ஒப்பு கொண்டார். பின்னர் போலீசார் ஜீவானந்தம், விக்னேஸ்வரன், பிரபாகரன், தினேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கைதான 4 பேரையும் போலீசார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வழிப்பறியில் தொடர்புடைய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.